விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என கேபிள், டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கு டிராய் சமீபத்தில் அறிவித்தது.
டிராய் அறிக்கையின்படி, இதுவரை கேபிள் வாடிக்கையாளர்களில் 65 சதவீதம் பேர், டிடிஹெச் வாடிக்கையாளர்களில் 35 சதவீதம் பேர் விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், நாட்டில் 10 கோடி கேபிள் வாடிக்கையாளர்களும், 6.7 கோடி டிடிஹெச் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.
விருப்பமான சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதில் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய முறையால் கட்டணத்தில் பெரிதாக மாற்றமில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, வருடாந்திர தொகை, புதிய முறையால் இன்னும் அதிகரித்திருப்பதாகவே பரவலாக கூறப்படுகிறது. அதேசமயம், ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லைவ் ஆப்களில் அதே சேனல்களை குறைவான கட்டணத்தில் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற ஆப்களில் டிவி சேனல்களை பார்க்க கண்டிப்பாக நெட் அவசியம். அதற்கும் சேர்த்து ஆகும் செலவு கூட, கேபிள், டிடிஹெச்சின் வருடாந்திர செலவை விட குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 17 முக்கிய சேனல்களை பார்க்க ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5 ஆகிய தளங்கள் மூலம், முறையே ரூ.999, ரூ.499, ரூ.999 தான் வருடாந்திர சந்தாவாக வசூலிக்கப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் வேர்ல்டு, ஹெச்பிஓ, ஸ்டார் பிளஸ், ஜீ டிவி, ஜீ சினிமா & பிளிக்ஸ், & பிக்சர்ஸ், சோனி செட், SAB, செட் மேக்ஸ், பிக்ஸ் உள்ளிட்ட 17 சேனல்களின் ஒட்டுமொத்த வருடாந்திர செலவு 2,497 ரூபாய் தான் ஆகிறது.
ஆனால், இதே 17 சேனல்களை டிடிஹெச் மூலம் பார்க்க மாதம் ரூ.430.70 செலவு ஆகிறது. ஆக, வருடாந்திர செலவு ரூ.5,168.40 ஆகிறது.