/indian-express-tamil/media/media_files/2025/09/17/tvs-iqube-2025-09-17-17-17-06.jpg)
ஸ்மார்ட்வாட்ச்-உடன் வரும் இந்தியாவின் நம்பர் 1 மின்சார ஸ்கூட்டர்: இனி ஸ்கூட்டரைக் கையிலேயே கட்டுப்படுத்தலாம்!
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ், தனது ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இந்த அம்சத்தைக் கொண்ட முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஐக்யூப் பெற்றுள்ளது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தையில் 35% பங்கைக் கொண்டுள்ள டிவிஎஸ், இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட ஐக்யூப் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
இந்த புதிய வசதிக்காக டி.வி.எஸ் நிறுவனம் 'நாய்ஸ்' (Noise) நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட்வாட்ச், வாகனத்தின் நிலை, பேட்டரி சதவீதம், டயர் அழுத்தம், பாதுகாப்பு எச்சரிக்கைகள் போன்ற முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதுமையான தொழில்நுட்பம் குறித்து பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அனிருத்த ஹல்தார், "தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மைய கண்டுபிடிப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், எதிர்காலப் பயணத்தை மீண்டும் வடிவமைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாய்ஸ் நிறுவனத்துடனான எங்கள் கூட்டு, ஒரு சாதாரண ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட் பயண உதவியாளராக மாற்றுகிறது," என்று தெரிவித்தார்.
டி.வி.எஸ் ஐக்யூப் நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்வாட்ச், டி.வி.எஸ்-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.2,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கும். இதனுடன் 12 மாத நாய்ஸ் கோல்ட் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு வழங்கும் சில முக்கிய அம்சங்கள்.
வாகன நிலை கண்காணிப்பு: ஸ்கூட்டர் பூட்டப்பட்டதா, திறக்கப்பட்டுள்ளதா, இயக்கத்தில் உள்ளதா, சார்ஜ் ஆகிறதா (அ) சார்ஜ் முடிந்துவிட்டதா போன்ற தகவல்கள் ஸ்மார்ட்வாட்சில் தெளிவாகக் காட்டப்படும்.
பேட்டரி நிலை (SoC): பேட்டரி சதவீதம், சார்ஜிங் முன்னேற்றம் மற்றும் பேட்டரி 20%க்கு கீழ் சென்றால் குறைந்த பேட்டரி எச்சரிக்கைகள் தெரியும்.
மீதமுள்ள பயண தூரம் (DTE): ஒவ்வொரு பயண முறைக்கும் (ride mode) மீதமுள்ள தூரத்தைக் காண்பித்து, உங்கள் பயணத்தைத் திறமையாகத் திட்டமிட உதவும்.
டயர் அழுத்தம் கண்காணிப்பு (TPMS): தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில், இரண்டு டயர்களின் நேரடி அழுத்த மதிப்பையும், பரிந்துரைக்கப்பட்ட அழுத்தத்தையும் காண்பிக்கும்.
சார்ஜிங் நிலை: சார்ஜ் முழுமையாக ஆக ஆகும் நேரம் மற்றும் "சார்ஜிங் நிறைவடைந்தது" போன்ற தகவல்கள் நிகழ்நேரத்தில் கிடைக்கும்.
வாகனம் இழுத்துச் செல்லுதல்/திருட்டு எச்சரிக்கை: வாகனத்தில் அசைவு கண்டறியப்பட்டால், ஸ்மார்ட்வாட்சில் அதிர்வும், காட்சி அறிவிப்பும் வரும், அதன்பின் மொபைல் செயலியிலும் அறிவிப்பு வரும்.
விபத்து/விழுதல் கண்டறிதல்: விபத்து அல்லது விழுதல் ஏற்பட்டால், வாட்ச்சில் உடனடியாக எச்சரிக்கை தோன்றும், அதன்பின் செயலியில் அறிவிப்பு வரும்.
ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை: மொபைல் செயலியிலிருந்து வரையறுக்கப்பட்ட புவி எல்லைகளை வாகனம் தாண்டினால் எச்சரிக்கை வரும்.
குறைந்த/முழு சார்ஜ் எச்சரிக்கைகள்: பேட்டரி நிலையின் அடிப்படையில் சார்ஜரை இணைக்க அல்லது துண்டிக்க அறிவிப்புகள் வரும்.
பாதுகாப்பு காட்சி குறிப்புகள்: சிவப்பு (கவனம் தேவை), பச்சை (சிறந்தது) நிறங்களில் குறியீடுகள் காட்டப்பட்டு, விரைவான முடிவெடுக்க உதவும்.
டி.வி.எஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் விவரக்குறிப்புகள்
டி.வி.எஸ் ஐக்யூப் மாடல்கள் ஸ்டாண்டர்ட், எஸ் (S), எஸ்.டி (ST) என 3 வகைகளில் கிடைக்கின்றன. இவற்றில் 2.2 kWh, 3.1 kWh, 3.5 kWh மற்றும் 5.5 kWh என 4 பேட்டரி விருப்பங்கள் உள்ளன. 2.2 kWh மற்றும் 3.1 kWh பேட்டரி கொண்ட மாடல்களில், 4 kW எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிமீ மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை செல்லும்.
3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரி கொண்ட மாடல்களில், 4.4 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 3.4 kWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லும், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ. 5.1 kWh பேட்டரி கொண்ட மாடல் 150 கிமீ தூரம் வரை செல்லும், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.