பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு , டிசம்பர் 16 முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் அறிவிப்பால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என பல வங்கிகள் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக வேலைநிறுத்ததை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இரண்டு நாள் வேலைநிறுத்தம் தவிர, தனியார்மயமாக்கும் யோசனையை அரசாங்கம் கைவிடவில்லை என்றால், தொடர் போராட்டங்களும் நடைபெறும் என்றார்.
2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். அரசாங்கம் ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை அரசு ஒன்றிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2 நாள் போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை, வங்கியில் செக் டெபாசிட் போன்ற வேலைகள் இருந்தால் அதை சீக்கிரமாக முடிந்து கொள்வது சிறந்தது ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil