ஊழியர் வருங்கால வைப்பு நிதி வைத்திருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வேலையை விட்டு நின்றுவிட்ட முதல் மாதத்தில் தங்களின் மொத்த பிஎஃப் பணத்தின் 75 சதவீதத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். மிச்சம் இருக்கும் 25% தொகையினை, இரண்டு மாதத்தில் எடுத்துக் கொள்ளவும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது. மேலும் “ஊழியர்கள் அந்த பிஎஃப் கணக்கினை புதிய வேலை கிடைக்கும் போது உபயோகித்துக் கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக பேசிய வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் “முன்பெல்லாம் ஒருவருடைய பிஎஃப் பணம் அவருக்கு முழுமையாக கிடைக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இருக்கும். ஆனால் தற்போது அந்நிலையை மாற்றி இருக்கின்றோம். மேலும் அந்த ஊழியருக்கு வேலை கிடைத்த பின்பு அதே பிஎஃப் கணக்கினை தொடரவும் வழி செய்திருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதற்கு முன்பு வரை, முதலில் 60% பணத்தினை மட்டுமே பெற இயலும். ஆனால் செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்திற்கு பின்பு 75% ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் நிதி மேலாளர்களாக ஏப்ரல் 1, 2015 அன்று பதவியில் அமர்த்தப்பட்டவர்களின் பணியினை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பதாகவும் அதனால் ப்ரொவிடண்ட் பண்ட்டின் க்ரிசில் (CRISIL) கன்சல்டன்சியின் பணிக்காலமும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் பங்குப் பரிவர்த்தனையக வர்த்தக நிதி மட்டும் ஒரு லட்சம் கோடியினை விரைவில் எட்டிவிடும் என்றும் கூறியிருக்கின்றார்.