பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மாற்றம், 2022 ஜூன் 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
வங்கி வெளியிட்டுள்ள தரவின்படி, 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.90% வட்டி வழங்கப்படுகிறது.
100 கோடி ரூபாய்க்கு மேல், 500 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.90 சதவீத வட்டி வழங்கிவந்த நிலையில், தற்போது 3.10% ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
அதேபோல், 500 கோடி ரூபாய்க்கு மேல், 1000 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு .90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வட்டி உயர்த்தப்பட்டு 3.40% வழங்கப்படுகிறது.
பெரிய டெப்பாசிட் தொகைக்கான சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை அதிகரித்துவிட்டு, பெரும்பாலான மக்களின் டெப்பாசிட் கணக்கான ரூ 50லட்சம் குறைவான கணக்கிற்கு வட்டியை குறைத்திருப்பது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
புதிய வட்டி விகிதம்:
- 50 லட்சம் ரூபாய் வரை – 2.75%
- 100 கோடி ரூபாய் வரை – 2.90%
- 500 கோடி ரூபாய் வரை – 3.10%
- 1000 கோடி ரூபாய் வரை – 3.40%
- 1000 கோடிரூபாய்க்கு மேல் – 3.55%
இதற்கிடையில், கோடக் மஹிந்திரா வங்கி 390 நாட்களில் முதிர்ச்சியடையும் 2 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. 5.20 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5.50 சதவீதம் வழங்கப்படுகிறது.
அதேபோல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4.40 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து, பந்தன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஃபெடரல் வங்கி ஆகியவை வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. வரும் நாட்களில், முக்கிய வங்கிகளின் குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil