Income Tax Budget 2025 Announcements Highlights: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனிநபர் வருமானவரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்கிற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், "இந்த வருட வரவு செலவு என்ன? என்பது பற்றி நீங்கள் பேசி இருக்க வேண்டும். அதைப் பற்றி பேசவே இல்லை. இந்த பட்ஜெட்டில் ரயில்வே பற்றி பேசவில்லை. தினமும் சராசரியாக 20 கோடி பேர் ரயில்களில் பயணிக்கின்றனர். அதைப் பற்றி பேசாமல், 2 கோடி பேர் பயணிக்கும் விமானம் பற்றி பேசுகிறீர்கள். அப்படி என்றால், இந்த அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
மின்துறை சீர்திருத்தங்களை மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால், கடன் வாங்க முடியாது என மட்டும் மிரட்டுகிறீர்கள். மின்துறை, தொலைத்தொடர்பு, சாலைகள், பேருந்துகள், ரயில்கள் போன்றவை குறித்து நீங்கள் எதுவுமே பேசவில்லை. அப்படி இருக்கையில், 10 லட்சம் கோடியை எதற்கு செலவு செய்யப் போறீங்க?
24 லட்சம் கோடி வரிவருவாய் 29 லட்சம் கோடியாக வரப்போகிறது என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால், வரிவருவாய் 20 சதவீதம் உயரும். பொருளாதார பெயரளவு வளர்ச்சி விகிதம் 10 சதவீதம் ஏறுகிறது என்றால், எப்படி வரிவருவாய் 20 சதவீதம் வரும்?.
எனவே, நீங்கள் வருமான வரியை குறைத்து விட்டு மறைமுக வரியை உயர்த்துவீர்கள். எல்லாருடைய பெயரிலும் வரியை வசூலிப்பதை தவிர, மறைமுக வரியை குறைக்கப்போவதில்லை. பெட்ரோல், டீசலில் கலால் வரியை குறைக்கப்போவதில்லை. கேஸ் விலையை குறைக்கப்போவதில்லை. அதனால், ரூபாயின் மதிப்பு குறையும். தங்கத்தின் விலை ஏறும். எனவே, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் மாறும் என எனக்கு நம்பிக்கை இல்லை." என்று அவர் கூறினார்.