/indian-express-tamil/media/media_files/2025/02/01/JUQ3aXHhKvRj4B3DsLlQ.jpg)
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "மத்திய பட்ஜெட் உப்பு சப்பில்லாதது" என்று கூறியுள்ளார்.
Income Tax Budget 2025 Announcements Highlights: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனிநபர் வருமானவரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதனைப் பின்வருமாறு பார்க்கலாம்.
நாராயணசாமி கருத்து
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "மத்திய பட்ஜெட் உப்பு சப்பில்லாதது பட்ஜெட். பட்ஜெட்டில் புதுச்சேரி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை கருத்து
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல. ஒரு சாராருக்கானது. ஓரிரு மாநிலங்களுக்காக நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
இ.பி.எஸ் கருத்து
தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், " 2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.
விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் ,
இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
ராமதாஸ் கருத்து
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதும், மருந்துகள் மீதான வரி குறைப்பும் வரவேற்கத்தக்கது: 100 நாள் வேலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்!
இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிரந்தரக் கழிவு ரு.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும். அந்த வகையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும். 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதும், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.
பள்ளிக் கல்விக்கு ரூ. 78572.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்க் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.