2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
மத்தியில் பா.ஜ.க 3-வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பா.ஜ.க கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Union Budget 2025: Manufacturing and consumption boost optimism, lift Sensex
இந்நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் சூழலில், பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. காலை 9:15 மணி நிலவரப்படி, நிஃப்டி 50 0.13 சதவீதம் உயர்ந்து 23,541.3 புள்ளிகளாக இருந்தது, அதே நேரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.18% அதிகரித்து 77,637.01 ஆக இருந்தது. கடன் மற்றும் அந்நிய செலாவணி சந்தைகள் இன்றைய நாளில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு வளர்ச்சி மற்றும் நுகர்வு மற்றும் நிலவும் புவிசார் அரசியல் சூழல் பற்றிய கவலைகளைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் 12 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைக் பங்குச்சந்தைகள் கண்டன. இந்த நிலையில், பட்ஜெட் நாளான இன்று சனிக்கிழமை சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவங்கியது. நடுத்தர வருமானப் பிரிவினரின் கைகளில் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் நுகர்வு மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீதாராமன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் சுமார் 0.33 சதவீதம் அல்லது 260 புள்ளிகள் உயர்ந்து சனிக்கிழமை ஆரம்ப வர்த்தக நேரத்தில் 77,760 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.