/indian-express-tamil/media/media_files/a6I4vgj4rMdEyFcbVd4b.jpg)
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ சேவைகளை நிர்வகிக்கும் தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ), ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் மற்றும் வரம்புகளை அமல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள், யு.பி.ஐ சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதையும், பரிவர்த்தனைகளை சீராகவும், விரைவாகவும் நடைபெற செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
வங்கி இருப்பு சரிபார்ப்புகளுக்கு வரம்பு:
இனி நீங்கள் ஒரு யு.பி.ஐ செயலி மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே உங்கள் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும். இந்தத் தேவையை குறைக்க, ஒவ்வொரு யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு பிறகும் உங்கள் கணக்கில் உள்ள இருப்பை வங்கிகள் காண்பிக்க வேண்டும் என்று என்.பி.சி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
இணைக்கப்பட்ட கணக்குகளை பார்ப்பது:
ஒரு யு.பி.ஐ செயலி மூலம் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் பட்டியலை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
தானியங்கு கட்டணம் (Autopay):
'ஆட்டோபே' நடைமுறை உச்ச நேரங்களுக்கு பிறகு அதாவது, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் உள்ள நேரத்தை தவிர்த்து மட்டுமே செயல்படுத்தப்படும்.
வணிகர் சரிபார்ப்பு:
சரிபார்க்கப்பட்ட வணிகர்களின் பட்டியல்கள் அல்லது பாதுகாப்பு குறியீடுகளை யு.பி.ஐ செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே, குறிப்பாக, உச்ச நேரம் அல்லாத வேளைகளில் பெற முடியும்.
யு.பி.ஐ செயலிகள் மற்றும் வங்கிகள், பயனர் மூலம் தொடங்கப்பட்ட அல்லது தானாக உருவாக்கப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நேர பயன்பாட்டின் போது, கூட்டாளர் நிறுவனங்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை இனி கண்காணிக்காமல் அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 31, 2025-க்குள் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கான தணிக்கைகள் (system audits) முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-க்குள் என்.பி.சி.ஐ-க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விதிகளுக்கு இணங்காத பட்சத்தில் அபராதங்கள் அல்லது புதிய பயனர்களை இணைப்பதற்கான தடை போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.