ஆர்.சந்திரன்
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 12,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்திய நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சொக்சி வரிசையில் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்ற தொழிலதிபர் பட்டியலில் அடுத்து இடம்பெறுவாரோ என்ற சந்தேக பட்டியலில் இருந்த வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத், இந்தியாவை விட்டு தப்பி ஓடும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிக்குழுத்தில் 25,000 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுள்ளது வீடியோகான் குழுமம். இந்த கடன்கள் சரியாக வசூலாகவில்லை. இதனால், புதிய திவால் சட்டத்தின்படி (Insolvancy & Bankruptcy Code) இக்குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது. இதனால், மேற்கண்டு நடடிவக்கை தொடங்கலாம் என்ற ஐயத்தால் வேணுகோபால் தூத் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என சில தரப்பினர் சந்தேகத்தைக் கிளப்பினர். நேற்று முழுக்க இது குறித்த புரளிகள் பரவிக் கொண்டிருக்க, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசிய தூத், தான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை எனவும், இனியும் அத்தகைய எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார். அதோடு தனது குழுமம் வங்கியில் இருந்து பெற்ற கடன் முழுவதையும் அடைப்பதற்கு தயாராகி வருவதாகவும், இது குறித்த அச்சம் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
பல்வேறு நுகர்பொருட்களின் உற்பத்தி, விற்பனை, வினியோகம் என பலவற்றில் ஈடுபட்டுள்ள வீடியோகான் குழுமம் தற்போது அவற்றில் தொடர்ந்து நஷ்டத்தைத் தரும் பல நிறுவனங்களை மூடி வருகிறது.
இது தவிர, 2015ம் ஆண்டு பாரத் பெட்ரோலியம் என்கிற பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து பிரேசில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி பணிகளில் வீடியோகான் இறங்கியுள்ளது. விரைவில் இதிலிருந்து வருவாய் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த கடனை அடைப்பது எளிதாக இருக்கும் என வீடியோகான் குழும அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுதவிர, தாங்கள் கடன்கொடுத்து, அதை சரிவர திருப்பிச் செலுத்தாத.... சந்தேகத்துக்குரிய சில தொழிலதிபர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து வைத்துக் கொண்டு, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை வங்கித் தரப்பில் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.