2018-19 ஆம் ஆண்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடவில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் காணொலி ஒன்று வைரலானது.
இந்நிலையில் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரச கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிஐபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.
பின்னர் புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் ரூ.1000 அறிமுகம் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டு ரூ.1000 நோட்டுகள் மீண்டும் ஜன.1, 2023ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருவதாக அறிகிறோம்.
இதில் உண்மை இல்லை. அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை. இந்த போலி செய்திகள் குறித்து வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 ரூபாய் எப்போது தடை செய்யப்பட்டது?
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் மற்ற மதிப்புள்ள புதிய நோட்டுகளையும் அரசு அறிமுகப்படுத்தியது.
2000 ரூபாய் நோட்டுகளை அரசு அச்சிடவில்லையா?
நிதி அமைச்சகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “2018-19 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை ” என்று கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/