இந்திரா நூயி பெப்சிக்கோவின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருக்கிறார். 12 வருடம் பெப்சிக்கோவில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றும் இந்திரா தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இந்திரா நூயி
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் ஒருவராகவே இன்றும் கருதப்பட்டுவருகிறார். இவரின் பூர்வீகம் சென்னையாகும்.
அக்டோபர் மாதம் 18ம் தேதி 1955ஆம் ஆண்டு, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இந்திரா நூயி தன்னுடைய பள்ளிப் படிப்பினை ஹோலி ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
கல்லூரிப் படிப்பினை மெட்ராஸ் கிருத்துவக் கல்லூரியிலும், மேலாண்மை படிப்பினை 1976ல் ஐஐஎம் கொல்கத்தாவிலும் முடித்தார். பின்னர் உயர்படிப்பிற்காக அவர் யேல் மேலாண்மைப் பள்ளியில் ( Yale School of Management ) சேர அமெரிக்கா சென்றார்.
இந்தியா வம்சாவளியான ராஜ் நூயி இவருடைய கணவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
பெப்சி நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு அமெரிக்காவில் இந்திரா பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப், மோட்டோரோலோ மற்றும் ஆசியா ப்ரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெப்சி நிறுவனத்தில் இந்திரா நூயி
பெப்சி உலகின் தலைசிறந்த குளிர்பான நிறுவனங்களில் ஒன்று. இந்திரா நூயியின் திறமைக்கு வாய்ப்பு கொடுத்தது பெப்சி நிறுவனம்.
1994ல் பெப்சியில் இணைந்தார் இந்திரா. பெப்சி நிறுவனத்தில் ஒரு பெண் எக்ஸ்க்யூட்டிவ் வேலைக்கு சேருவது அதுவே முதல் முறை.
2000ம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகராக உயர்வடைந்தார். பின்னர், பின்னர் அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
To read this article in English
உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர் இந்திரா நூயி
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 2017ம் ஆண்டிற்கான ”உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்” பட்டியலில் இந்திரா 3 வது இடம் வகித்தார்.
ஃபார்டூன் (Fortune) பத்திரிக்கை வெளியிடும் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 2006 -2010 வரையிலான 5 ஆண்டுகளில் முதலிடம் வகித்தார் இந்திரா நூயி.
சிறப்பு அங்கீகாரங்கள் மற்றும் பதவிகள்
2007ம் ஆண்டு இந்திய அரசு இந்திராவிற்கு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.
யூஎஸ் நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட் – 2008ல் அமெரிக்காவின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் இந்திராவின் பெயரை வெளியிட்டிருந்தது.
2008ல் இந்தியா – அமெரிக்க வர்த்தக கவுன்சிலில் சேர்வுமனாக இந்திராவை அறிவித்திருந்தார்கள்.
2009ம் ஆண்டின் சிறந்த தலைமைச் செயல் அதிகாரி என்று குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் அமைப்பு அறிவித்தது.