நடப்பு ஆண்டு இந்திய தொழில்துறைக்கு சவாலாகவும், சோதனை மிகுந்ததாகவும் இருந்தது. குறிப்பாக, தொழில்துறையின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கிய ரத்தன் டாட்டா, நடப்பு ஆண்டில் தான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இழப்பு நீங்கா இடத்தை விட்டுச் சென்றது. இதே போன்று, சில பிரபலமான தொழிலதிபர்களும் இந்த ஆண்டில் உயிரிழந்தனர்.
ராமோஜி ராவ்:
இந்தியாவின் ஊடகம் மற்றும் திரைத்துறையில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பிய ராமோஜி ராவ், கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். ஹைதராபாத்தில் சுமார் 1666 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியின் நிறுவனாரான இவர், இடிவி என்ற பெயரில் செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை நடத்தி வந்தார்.
நாராயணன் வாகுல்:
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல், கடந்த மே 18-ஆம் தேதி மரணமடைந்தார். நவீன வங்கித் துறையின் தந்தை என போற்றப்படுபவர் நாராயணன் வாகுல். எஸ்.பி.ஐ வங்கியில் தனது பணியை தொடங்கிய அவர், கடந்த 1985-ஆம் ஆண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநரானார். இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷசி ரூயா:
எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனரான ஷசி ரூயா, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி காலமானார். கடந்த 1969-ஆம் ஆண்டு தனது சகோதரர் ரவி ரூயாவுடன் இணைந்து, எஸ்ஸார் குழுமத்தை சென்னையில் நிறுவியவர் ஷசி ரூயா. சுரங்கம், ஸ்டீல் ஆகியவற்றுடன் 25 நாடுகளுக்கும் மேலாக இவர்களது தொழில் பரவி இருக்கிறது. இவர் தனது 81-வது வயதில் உயிரிழந்தார்.
ரத்தன் டாட்டா:
இந்த ஆண்டின் மற்றொரு இழப்பாக அமைந்தது ரத்தன் டாட்டாவின் மரணம். இந்திய தொழில்துறையின் முன்னோடியாக திகழ்ந்த ரத்தன் டாட்டா, வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்தார். டாட்டா நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்த அவர், பத்ம விபூஷன், மகாராஷ்டிர பூஷன், பத்ம பூஷன் போன்ற பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் கார் என்னும் கனவை, நானோ கார் மூலம் நிறைவேற்றினார். இவர் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“