நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இணையவழி பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஏடிஎம் கம் டெபிட் கார்டுகளுக்கு விடை கொடுக்க இருப்பதாகவும், தங்கள் வங்கியின் YONO முறையை ஊக்குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கி அட்டைகளுக்கு பதிலாக, 'YONO' எனப்படும், 'டிஜிட்டல்' மெய்நிகர் அட்டைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில், வங்கி இறங்கி உள்ளது.இது குறித்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி.ஐ., தலைவர், ரஜினீஷ் குமார்பேசியதாவது:நாட்டில், மொத்தம், 90 கோடி 'டெபிட் கார்டு'களும், மூன்று கோடி, 'கிரிடிட் கார்டு'களும் பயன்பாட்டில் உள்ளன. இந்த டெபிட் கார்டுகள் பயன்பாட்டை, முழுவதுமாக ஒழிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு பதில், 'YONO' என்ற 'மொபைல் போன்' செயலி, அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏ.டி.எம்.,களில் பணப் பரிவர்த்தனை செய்ய, பொருட்கள் வாங்க, வாடிக்கையாளர்கள், இந்த செயலியை பயன்படுத்தலாம்.இதன் மூலம், வங்கி அட்டை பயன்பாட்டை முழுவதுமாக ரத்து செய்து, 'விர்சுவல் கார்டு' எனப்படும், மெய்நிகர் அட்டைகளை அறிமுகப்படுத்த, எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, ஏற்கனவே, 68 ஆயிரம், 'யோனோ' மையங்கள் துவங்கப் பட்டு உள்ளன. இன்னும், ஒன்றரை ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர்த்தப்பட உள்ளன.
மேலும், 'YONO' செயலியில், ஒரு சில பொருட்களுக்கு, கடன் வசதி திட்டமும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், 'பிளாஸ்டிக்' வங்கி அட்டை பயன்பாடு பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு, மெய்நிகர் அட்டைகளை மக்கள் பயன்படுத்த துவங்கி விடுவர். இவ்வாறு அவர் பேசினார்.
YONO app செயல்படும் விதம்
YONO இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஸ்மார்ட்போன்களில் YONO செயலியின் மூலம் லாகின் செய்துகொள்ள வேண்டும். YONO Pay திரையில் தோன்றி பின் YONO cash பகுதிக்கு நேவிகேட் ஆகும்.
YONO cash பகுதியில், Request YONO Cash பிரிவில், டிரான்ஸ்சாக்சன் செய்யப்பட வேண்டிய பணமதிப்பை உள்ளீடவும்.
6 இலக்க YONO Cash PIN நம்பரை பதிவிடவும்.பின் உங்கள் மொபைலுக்கு 6 இலக்க ரெபரென்ஸ் நம்பர் குறுந்தகவலாக வரும்.
இந்த செயல்பாடுகள் முடிவடைந்தவுடன், அருகிலுள்ள SBI YONO ATMக்கு சென்று அங்குள்ள மெசினில், ஆறு இலக்க ரெபரென்ஸ் நம்பரை பதிவிடவும். இந்த ரெபரென்ஸ் நம்பர் 30 நிமிடங்களுக்காக பயன்படுத்திவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ஷாப்பிங்கின்போது பேமெண்ட் ஆப்சனிற்கு YONO செயலி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ டெபிட் கார்டுகளும் தொடரும் : YONO செயலியின் பயன்பாடு பரவலாக்கப்பட்ட போதிலும், எஸ்பிஐ டெபிட் கார்டுகளின் சேவைகளும் தொடரும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் சேவை இல்லாத இடங்களில், டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.