தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது பிரபலமான அஞ்சலக சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டுக்கு நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமின்றி வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இது மற்ற நிலையான வருமான சேமிப்பு திட்டங்களை விட அதிக நிலையான வருவாயை வழங்குகிறது.
தனிப்பட்ட நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, நிலையான மாத வருமானத்தைப் பெற முதியோர்கள் என்எஸ்சி திட்டத்தை பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் எந்தவொரு தனிநபரோ அல்லது சிறார்களின் சார்பாகவாகவும் முதலீடு செய்யலாம்
வட்டி விகிதம்
ஒவ்வொரு காலாண்டிலும் NSC திட்டத்துக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கிறது. நடப்பு காலாண்டின் விகிதம் 6.8 சதவீதமாக உள்ளது. உதாரணமாக, நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு என்எஸ்சி திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், ஐந்து ஆண்டுகளில் அந்த தொகை 1,389 ஆக அதிகரிக்கும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லாததால் NSC திட்டத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இப்போது நீங்கள் ரூ.10 லட்சத்தை என்எஸ்சியில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.13.89 லட்சமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வரி சேமிப்பு திட்டங்களில், தேசிய சேமிப்பு சான்றிதழ் முதன்மையானது. வருமான வரிச் சட்ட பிரிவு 80 சி கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், அதனை 80 சி-யின் கீழ் கணக்கு காண்பித்து வருமான வரி சலுகையை பெற முடியும்.
முன்க்கூட்டியே பணம் பெறுதல்
மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே என்எஸ்சி திட்டத்தில் பணத்தை பாதியிலே திரும்ப பெற முடியும். ஒன்று முதலீட்டாளரின் மரணம், நீதிமன்ற உத்தரவு அல்லது உறுதிமொழி அளிப்பது. ஓராண்டிற்குள் பணத்தை திரும்பபெற்றால், முதலீடு செய்த தொகை மட்டுமே வழங்கப்படும். திட்டத்தில் இணைந்து ஒன்று முதல் மூன்று ஆண்டிற்குள் பணத்தை எடுத்தால், சாதாரண சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட வட்டியே அளிக்கப்படும். மூன்றாண்டுகளுக்கு பிறகு பணம் எடுத்தால், கிடைத்த தொகையில் சிறியளவில் கழிக்கப்பட்டு வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil