/tamil-ie/media/media_files/uploads/2021/07/Ration-card-2.jpg)
குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டு என்பது மிகவும் இன்றியமையாத ஆவணமாகும். இது பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்க பயன்படுவதோடு, பிற அரசு சேவைக்களுக்கு ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது புதிய ரேஷன் கார்டை 15 நாளில் எப்படி வாங்குவது என்பதுப் பற்றி தெரிந்துக் கொள்வோம். சமீபத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக ஆளுநர் சட்ட பேரவை உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்களோ அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது. குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகையாக வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டின் வகைகள்
PHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
PHH - AAY என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டுதாரர்கள், 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
NPHH என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டில், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
NPHH - s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். ஆனால், அரிசி கிடைக்காது.
NPHH - Nc என்று ரேஷன் அட்டையில் குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பெயர் நீக்குதல், சேர்த்தல்
புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக பிரித்து புதிய கார்டு வாங்க, உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள உங்கள் பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து ஆன்லைன் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.
அடுத்து, முன்பு குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டும் தேவை. ஆதார் கார்டினை கொடுக்காவிட்டால், உங்களால் கூடுதல் பொருட்களை வாங்க முடியாது. எனவே குழந்தைகளுக்கு ஆதார் கார்டினை பெற்ற பின்னர் விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் கார்டு வாங்கிய பின்னர், குழந்தைக்கு ஆதார் பெற்று, பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
குடும்ப தலைவரின் புகைப்படம்
தற்போதைய ரேஷன் கார்டு
வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம்
எரிவாயு இணைப்பு (உங்களிடம் ஏற்கனவே இருந்தால்)
உங்களிடம் உள்ள எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும். எரிவாயு இணைப்பு இல்லை எனில் அதையும் குறிப்பிட வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை சரியாக கொடுக்கும்பட்சத்தில் உங்களுக்கு ரேஷன் கார்டு 15 - 20 நாட்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சரியான ஆவணங்களை கொடுக்கவில்லை எனில், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஆன்லைன் விண்ணப்பம்
முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு குடும்பத்தலைவரின் பெயர் (Name of family head) என்ற பாக்ஸின் கீழ், தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
அதன் பிறகு உங்களின் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
அடுத்து, விண்ணப்பத்தில் குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர் அட்டை தேர்வு என்ற பாக்ஸில் உங்களுக்கு தேவையான அட்டை வகையினை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்கலாம்.
உறுப்பினர்கள் சேர்க்கை
இப்போது உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். மேலும், பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களையும் கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்த ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக குடும்பத்தின் பிற உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். உறுப்பினரின் பெயர், குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன், மகள், மனைவி அல்லது கணவன் என்பதை கொடுக்க வேண்டும். பின்னர் உறுப்பினருடைய பிற விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் திருத்தம் வேண்டும் எனில் அதனை கிளிக் செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
எரிவாயு இணைப்பு விவரம்
இப்போது எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பில் பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். உங்களிடம் எத்தனை எரிவாயு இணைப்பு உள்ளது, உங்கள் எரிவாயு இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றையும் சரியாக கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து கொண்டு, உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். ஆக அதனை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
உங்களது ரேஷன் கார்டு விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது தகவல் மற்றும் ஒரு குறிப்பு எண்ணும் வரும். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் விண்ணப்பம் முடிந்த பிறகு, அந்த நகலுடன் உங்களது ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்டவற்றை வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரைவில் உங்களது விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்.
நீங்கள் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இதற்கு 1 - 2 மாதங்கள் ஆகலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.