கணவரின் காதலியை எரித்துக் கொலை செய்து ஏன் என கைதான மனைவியை போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேட்டைச் சேர்ந்தவர் வைரம் (45). கூலி தொழிலாளியான இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஒராண்டுக்கு மேலாக வைரம், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த அமலு(45) என்பவருடன் வைரத்துக்கு தொடர்பு ஏற்பட்டது. மனைவியை பிரிந்த அவர், அந்த பகுதியில் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். அப்போது ஓட்டல் நடத்தி வரும் அமலுவுக்கும் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக ஓரே வீட்டில் தங்கியிருக்க ஆரம்பித்தனர். அமலுவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவருடைய கணவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வைரம், அமலுவுடன் குடித்தனம் நடத்துவதை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி, கணவரை சந்தித்து தன்னோடு சேர்ந்து வாழ வருமாறு கேட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக போலீசார், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்பட பல இடங்களில் மனு கொடுத்துப் பார்த்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 21ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் மனு கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் மனம் நொந்த ராஜேஸ்வரி, கணவனை மீட்க அவரின் காதலியிடமே முறையிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அமலுவின் ஓட்டலுக்குச் சென்றார். ‘என் கணவரை என்னிடம் அனுப்பிவிடு. அவருடனான தொடர்பை துண்டித்துவிடு’ என்று கேட்டார். ‘நீ அவரை ஒழுங்காக வைத்திருந்தால் ஏன் இங்கே வரப்போகிறார்’ என்று அமலு பதில் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, அங்கு இருந்த பெட்ரோல் கேனை எடுத்து அமலு மீது ஊற்றினார், ராஜேஸ்வரி. அதே வேகத்தில் தீயையும் பற்ற வைத்தார். தீ மளமளவென அமலு உடல் மீதும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அமலுவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘கடந்த ஒன்றரை வருடமாக என் கணவர் வீட்டுக்கு வருவதில்லை. செலவுக்கும் பணம் தருவதில்லை. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டேன். கணவரை சேர்த்து வைக்குமாறு போலீஸ் உள்பட முதல் அமைச்சர் அலுவலகம் வரை மனு அனுப்பியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்துதான் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினேன். உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. வேறு வழியில்லாமல் அமலுவிடமே கேட்டுவிடுவது என்று போனேன். அவளோ, என் கணவரை அபகரித்ததை நியாயப்படுத்தும் விதமாக பேசினார். ஆத்திரம் அடைந்த நான், நீ உயிரோடு இருப்பதால்தானே ஆட்டம் போடுகிறாய் என்று சொல்லி பெட்ரோலை ஊற்றி கொலை செய்தேன்’’ என்று சொன்னார்.
வைரத்தின் காதல் விளையாட்டால், நான்கு குழந்தைகள் தாய் தந்தையை இழந்து தவிக்கிறது.