இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகவேகமாக பரவி வரும் நிலையில் பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்தும், பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுகளை தள்ளி வைத்ததும் சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல், கோவிட் -19 அதிகரிப்பால் பல மாநிலங்கள் தங்களது பொதுத் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. இருப்பினும், சில மாநிலங்கள் திட்டமிட்டபடி தேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில் தொற்றுநோய் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மே 3 முதல் 21ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம்
உத்திரபிரதேச கல்வி வாரியம் மே 8 முதல் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகளில் சுமார் 56 லட்சத்துக்கும் அதிகமான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் தேர்வுகளை நடத்த அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் 19 பேரில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநில அரசு, பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வை ரத்து செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மாநில ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் கூறியதாவது: “பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்வு ஜூன் 21 முதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.” இருப்பினும் வரும் நாட்களில் உள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
ஹரியானா
இன்று, வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாநில வாரியத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஹரியானா அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது. முன்னதாக, வாரிய தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் மே 15 வரை பத்தாம் வகுப்புக்கும், ஏப்ரல் 20 முதல் மே 17 வரை பன்னிரெண்டாம் வகுப்புக்கும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம்
இமாச்சலப் பிரதேச அரசு புதன்கிழமை பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான வாரிய தேர்வுகளையும், ஏப்ரல் 17 முதல் தொடங்க உள்ள இளங்கலை பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. "இந்த பிரச்சினை தொடர்பாக வரும் மே 1 ஆம் தேதி அரசாங்க மட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அதன்படி அடுத்த கட்ட நடைமுறைகள் இருக்கும்" என்று அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் அரசு புதன்கிழமை அன்று அஜ்மீர் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும், 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.. முன்னதாக, 1-7 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா
மேகாலயா மாநில வாரிய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் கால அட்டவணையின்படி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடைபெறும் என்று துணை முதல்வர் பிரஸ்டன் டின்சோங் தெரிவித்துள்ளார். கோவிட் -19 நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் -19 தொற்று அதிகரித்துள்ளதால் எஸ்.எஸ்.சி மற்றும் எச்.எஸ்.சி தேர்வுகளை ஒத்திவைப்பதாக மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் திங்கள்கிழமை அறிவித்திருந்தார். மேலும், கெய்க்வாட் தொடர்ச்சியான தனது ட்வீட்டுகளில், தொழில்முறை படிப்புகள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கான நுழைவுத் தேர்வுகள் மே இறுதிக்குள் நடைபெறும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். நிலைமை சீரானவுடன் இறுதி தேர்வு அட்டவணை மற்றும் தேதிகள் பின்னர் வாரிய இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்ரா அரசு தற்போது ஊரடங்ககை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப்பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். தேர்வுகள் ஏப்ரல் 30 மற்றும் மே 1 முதல் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு, புதன்கிழமை அன்று, கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும், ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.