பள்ளிகளில் காலை கூடுகைக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சமத்துவம் பேசும் பத்து பாடல்கள் இசைத் தொகுப்பில் பாடல்கள் எழுதிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பெருமாள் முருகன், கவிஞர் சுகிர்த ராணி, பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, திருநங்கை செயற்பாட்டாளர் ரேவதி, பேராசிரியர் ரவி, ஆகியோரை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.
https://www.facebook.com/azhagiya.periyavan/posts/pfbid0TJ5k9QK5DNJBvq4opkPpyzcovK9sBLZqbt8wwL5bfFPGRoYcXBb4gDReXqiUXFcZl
இது குறித்து எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், பெண்ணுரிமை, உழைப்பாளர் மேன்மை, அறிவியல் மனப்பான்மை, சூழல் நேயம் உள்ளிட்ட சிந்தனைகளை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை 'சமத்துவம் பேசும் பத்துப்பாட்டு' என்ற பெயரில் 10 பாடல்களை உருவாக்கி இருக்கிறது.
விரைவில் ஒலி வடிவாகவும், காணொளி வடிவிலும் வெளியிடப்பட இருக்கின்ற அப்பாடல்களை நானும் பெருமாள் முருகன், சுகிர்தராணி, திருநர் ரேவதி, ரவி, ரமேஷ் வைத்திய ஆகியோரும் எழுதியிருக்கிறோம்.
அரசியல் அமைப்புச் சட்ட முகப்பு, அறிவியல் மனப்பான்மை, சூழல் நேயம் ஆகிய தலைப்புகளில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். இந்தப் பாடல்களை திரைப்பட இசை அமைப்பாளர்களும் பிரபலமான பாடகர்களும் இசை அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.
எமது இந்தக் குழுவை ஒருங்கிணைத்தது பிரபல கர்நாடக இசை பாடகர் டி. எம். கிருஷ்ணா அவர்கள். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை திட்ட இயக்குனர் திரு. சுதன், திருமதி.ஸ்ரீஜா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த திட்டம் நிறைவேற்றபட்டு இருக்கிறது.
இன்று காலை சமத்துவம் பேசும் பத்துப்பாட்டு கவிஞர் குழுவை நேரில் அழைத்து, அலுவல் இல்ல அலுவலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு செய்து, நினைவுப் பரிசை வழங்கி பெருமைப்படுத்தினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“