பொறியியல் சேர்க்கையில் ஒரே மதிப்பெண்கள் இருந்தால், கடைசி வாய்ப்பாக பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்த முடியாததால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மதிப்பெண்கள் கணக்கிட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் அதிகப்படியான மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளதால், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான தகுதி பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆனால் மாணவர்களில் பலருக்கு ஒரே மாதிரியான மதிப்பெண்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொறியில் சேர்க்கையில் முன்னுரிமை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரேண்டம் எண் மாணவர்களின் முன்னுரிமையை பறிப்பதை விரும்பாத உயர்கல்வித்துறை, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
அதிகப்படியான மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தால், வெவ்வேறு பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு தகுதி தீர்மானிக்கப்படும். தகுதி முன்னுரிமைக்கான வழிகாட்டுதல்கள் கீழே.
ஒரே மதிப்பெண்கள் பெற்றவர்களில் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கணித பாடத்திலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், இயற்பியல் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு தரவரிசை தயாரிக்கப்படும்.
இயற்பியல் பாடத்திலும் ஒரே மதிப்பெண் என்றால், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண் சதவீத அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஒருவேளை அதிலும் ஒரே மாதிரியான நிலை வந்தால், தகுதித் தேர்வுகளில் (அரையாண்டுத் தேர்வு அல்லது திருத்தத் தேர்வு) பெற்ற மதிப்பெண்கள் சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதிலும் பிரித்தறிய முடியவில்லை என்றால் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தை கொண்டு முன்னுரிமை வழங்கப்படும்.
இவற்றில் எதுவுமே தெளிவான விருப்பத்தை கொடுக்க முடியாவிட்டால், அவர்களின் பிறந்த தேதியின்படி அவர்களை தரவரிசைப்படுத்துவதே இறுதி வழி.
இருப்பினும், வேதியியல் பாடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் பொறியியல் சேர்க்கையில் வேதியியல் பாடம் முக்கியத்துவம் பெறவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil