தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாததால் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. இருப்பினும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மட்டுமாவது நடத்த முடிவு செய்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே 11ஆம் வகுப்பில் சேர இருப்பதால் அவர்களின் தகுதி குறித்து ஆராய 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 12ஆம் வகுப்புக்கு எளிதாகப் போய் விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் 11ஆம் வகுப்பில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து இருப்பார்கள். ஆனால், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். எனவே மாணவர்கள் எந்த மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய அனுமதிக்க முடியும் என குழப்பம் எழுந்துள்ளது. இதில் பள்ளி நடைமுறையும் பாதிக்கப்படும் என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றித் தேர்ச்சி பெற்றாலும் 11ஆம் வகுப்புக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதில் தனியார் பள்ளிகள் தாங்கள் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்து அதன் அடிப்படையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் என்கிற உத்தரவை உயர்நீதிமன்றத்தில் பெற்றுவிட்டார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த முடிவின் படி பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்த விரும்பினால் அரசு நடத்தும் மாநில அளவிலான தேர்வில் கலந்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், தேர்வு எழுதினால் நல்ல மதிப்பெண் பெறலாம் என்கிற மாணவர்கள் இந்த மாநில அளவிலான தேர்வை எழுதலாம். அரசு தேர்ச்சி என்று அறிவித்ததே போதும் என்று நினைப்பவர்கள் எழுதத் தேவையில்லை அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 35 மதிப்பெண் வழங்கப்படும்.
இதற்கான முடிவு தற்போது கொள்கை அளவில் எடுக்கப்பட்டாலும், அடுத்து அமையும் புதிய அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு அந்த அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இது நடைமுறைக்கு வரும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இவ்வாறு முடிவெடுத்தாலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் விருப்பப்பட்டாலும் தேர்வு எழுத வர முடியுமா? மீண்டும் மொத்தமாக தேர்வெழுதக் குவிந்தால் மாணவர்கள், அவர்கள் வீட்டிலுள்ளோர், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மாணவர்கள் விரும்பாவிட்டாலும் பெற்றோர் தரும் நெருக்கடி காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதும் சூழலுக்குத் தள்ளப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசே இதுகுறித்து முடிவெடுக்கும் எனத் தெரிய வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil