தமிழகத்தில் நாளை முதல், 200 மையங்களில் 12ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 48,000 ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் இந்த பணியில், 48 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
கொரோனா பெருந்தொற்று சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு சென்னையில் தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாது. சென்னையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் போதிய கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தேர்வுத்தாள் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், ஊரடங்கு காரணத்தால் ஆசிரியர்கள் தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களில் சிக்கிக் கொண்டிருந்தால்,இருக்கும் மாவட்டங்களில் இருந்தே தேர்வுத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளலாம். நோய் கட்டுபாட்டு மண்டலங்களில் திருத்தும் மையங்கள் அமைக்கப்படாது. நோய் கட்டுப்பட்டு மண்டலங்களில் இருக்கும் ஆசிரியர்கள், விடைத்தாள்திருத்தும் பணிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிக்கும் வகையில், ஓவ்வொரு அறையிலும் அதிகபட்சமாக 8 ஆசிரியர்கள் (கடந்த ஆண்டு 24 ஆசிரியர்கள்) இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட +2 வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil