+2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துக் கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.
விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், +2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், 10.05 மணிக்கு தான் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

+2 தேர்வில் 94.03 சதவீத பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதன்படி 94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்கள் 3,49,697 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 ஆகும்.
முதல் இடத்தை விருதநகர் மாவட்ட மாணவர்களும், 2-ம் இடத்தை திருப்பூர் மாவட்ட மாணவர்களும், 3-ம் இடத்தை பெரம்பலூர் மாவட்ட மாணவர்களும், கடைசி இடத்தை கிருஷ்ணகிரி மாவட்டமும் பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை-30,910 மாணவர்கள், இதில் ஆண்கள்-14,390, பெண்கள்-16,520, இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை-29,679 ஆகும். இதில் ஆண்கள்-13,520,
பெண்கள்-16,159, தேர்ச்சி-ஆண்கள்-93.95 சதவீதம், தேர்ச்சி-பெண்கள்-97.81 என திருச்சி மாணவர்களின் மொத்த தேர்ச்சி சதவீதம்-96.02 ஆகும். தேர்வு முடிவுகளை திருச்சியில் பள்ளிகளின் தகவல் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருந்ததை மாணவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச்செல்கின்றனர்.
தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம்.
அதேபோல், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC)மற்றும் அனைத்து மைய, கிளைநூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளிமாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்பட்டது.
அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் http://www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, இன்று காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அமைச்சர் சென்னை சென்றதால் +2 முடிவுகள் 10.05 மணிக்கு வெளியாகின. தாம் தாமதமாக வந்து வெளியிட்டதற்கு மாணவர்கள் மத்தியிலும், மீடியாக்கள் மத்தியிலும் வெளிப்படையாகவே தமது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“