HSC board Exams : தமிழகத்தில் கொரோனா 2வது பரவல் அதிகரித்து இருக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடியே நடக்குமா என்பது குறித்த கேள்வியிருந்தது. இந்நிலையில் பிளஸ் 2 செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பொதுத் தேர்வு கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். பிளஸ் 2 செய்முறை தேர்வு இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. குறிப்பாக இயற்பியல், வேதியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு முன்னரும், பின்னரும் அறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வின்போது PIPETTE க்கு பதில் BURETTE பயன்படுத்தலாம். ஆய்வக அறையில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகே சானிடைசரை வைக்கக்கூடாது.
செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அறிகுறி உள்ளவர்கள் குணமடைந்தபின் தனியாக செய்முறை தேர்வை நடத்தலாம் போன்ற நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு வழிமுறை வெளியானதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இந்த செய்முறைத் தேர்வினை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil