தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்து திடீரென அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலையால் தொற்று எண்ணிக்கி வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 927 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த வாரம் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை, பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனிடையே, கரோனா தடுப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்கள் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்லது. மேலும், பிளஸ் 2 தேர்வு சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"