TN 12th result answer sheet download: 12ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) தங்கள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
விண்ணப்பம் செய்த மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று தங்கள் பதிவு எண், பிறந்த தேதி & வருடம் ஆகியவற்றை பதிவிட்டு பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த மாதம் 16ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வாயிலாகவும் மறுகூட்டல் மறுமதிப்பீடு விடைத்தாள் நகல்களை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
விடைத்தாள் நகல்களை பெற்ற பின்னரே மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விடைத் தாள் நகல்களை பெற்ற மாணவர்கள் தங்கள் மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலகம் சென்று ஆகஸ்ட் 21 முதல் 25 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதிய பாடத்திட்ட முறை, வினாத்தாள் முறை மாற்றம் போன்ற காரணங்களால், இந்த ஆண்டு வாரியத் தேர்வில் அறிவியல் பாடப் பிரிவில் பெரும்பாலான மாணவர்கள் மோசமான மதிப்பெண்கலைப் பெற்றனர். ஆகவே, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற முக்கிய பாடங்களில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.
மறுமதிப்பீடு கோரும் ஒவ்வொரு விடைத்தாள்களுக்கும் மாணவர்கள் ரூ. 505 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மாணவர்கள் ரூ .205 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil