தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் இன்று (மே 6) காலை வெளியானது. தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, அரசு பள்ளிகளில் 91.32 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத பேரும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதம் பேரும், இருபாலர் பள்ளிகளில் 94.7 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
125 சிறைவாசிகள் தேர்வுகளை எழுதிய நிலையில் அதில் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரத்து 371 பேரும், மாணவிகள் 16,244 பேர் என மொத்தம் 29 ஆயிரத்து 615 பேர் தேர்வு எழுதினர். அதில் பள்ளி மாணவர்கள் 12,491 பேரும், மாணவிகள் 15,863 பேர் என மொத்தம் 28,354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, மாணவர்கள் 93.42 சதவீதமும், மாணவிகள் 97.65 சதவீதம் என மொத்தம் 95.74% விழுக்காடு பெற்று திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை உற்று நோக்குவதை விட பள்ளிக் கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தையும், முன்னிலையையும் பலரும் உற்று நோக்கி வந்த நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு குறைவாகவே காணப்பட்டது. திருச்சியில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 95.74 ஆகும். இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது தற்போது தேர்ச்சி 0.28 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“