Tamil Nadu 12th Board Exam Top Tips: தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 1) பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. மாணவர்களின் கல்விப் பயணத்தில் பிளஸ் 2 முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியை மாணவ, மாணவிகள் தேர்வு செய்ய முடியும்.
என்னதான் ஆண்டு முழுவதும் படு சிறப்பாக படித்திருந்தாகும், தேர்வு தருணத்தில் அதற்காக சரியான முறையில் தயாராவதும் மிக முக்கியம். அந்த வகையில் தேர்வுக்கு தயாராகும் மாணவ மணிகளுக்கு முக்கியமான டிப்ஸ் இங்கே..
/tamil-ie/media/media_files/uploads/2017/06/school-4-300x182.jpg)
1. முதலில் நேர்மறையான மனநிலையில் தேர்வை அணுக வேண்டும். நேர்மறையான எண்ணம், உங்கள் பர்சனாலிட்டியில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பதற்றத்தை போக்கும். சோர்வு உங்களை அண்டாது.
2. கால அட்டவணை தயார் செய்து, அதன் அடிப்படையில் படியுங்கள். உங்கள் அட்டவணையில் நிர்ணயம் செய்த கால அளவில், அந்த குறிப்பிட்ட பாடத்தை முடித்திருக்க வேண்டும்.
முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், சாம்பிள் கேள்வித் தாள்கள் ஆகியன கடைசி நேர ரிவிஷனுக்கு உதவும். ஒரு சப்ஜெக்டில் எந்த பிரிவில் நீங்கள் பலவீனமாக இருப்பதாக கருதுகிறீர்களோ, அதை முதலில் படியுங்கள். உங்கள் ஆசிரியருடன் அல்லது நன்கு திட்டமிட்டு படிக்கும் நண்பர்களுடன் சிறிய கலந்தாய்வை மேற்கொள்வது நலம்.
3. தேர்வுக்கு முன் தினம் இரவு மிக முக்கியமானது. அன்று பாடம் முழுவதையும் உருப் போடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பலவீனமாக இருப்பதாக கருதும் பாடத்தை அல்லது முக்கியமானதாக கருதும் ‘டாபிக்’களை வாசித்து விடலாம்.
தேர்வுக்கு முன் தினம் இரவு கூடிய வரை சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் உற்சாகமாக நீங்கள் செல்ல முடியும்.
4. தேர்வுக்கு முன்னதான சில மணி நேரங்களை கவனத்துடன் கையாள வேண்டும். அன்று காலையில் எழுந்து, முக்கியமான டாபிக்களை வாசியுங்கள். தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்பே புத்தகங்களை மூடி வைத்துவிடுங்கள். அதன்பிறகு முழு நம்பிக்கையுடன் இருங்கள்.
நண்பர்களோ, வேறு யாரோ அவர்கள் படிக்காத பாடம் தொடர்பாக வந்து புலம்புவதற்கு காது கொடுக்காதீர்கள்.
5. தேர்வு ஹாலில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய பென், பென்சில், ரப்பர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை கவனமுடன் வைத்திருங்கள். சிறிய பொருளா, பெரிய பொருளா என்பதல்ல. தேவையான பொருளை கொண்டு செல்லாவிட்டாலும், தவறவிட்டாலும் தேர்வு தருணத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கும்.
தேர்வு வினாத்தாளில் உள்ள விதிமுறைகளை மிகக் கவனமாக படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
6. நேர மேலாண்மை மிக முக்கியம். வினாத்தாளை ஒருமுறை முழுவதும் கவனமாக வாசித்துப் பார்த்துவிட்டே விடைத்தாளில் கை வைக்க வேண்டும். அதிக மதிப்பெண் கொண்ட கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுவது உத்தமம். காரணம், ஒரு மார்க் கேள்விகளுக்கான பதில்களை, கடைசி 30 நிமிடங்களில்கூட எழுதிவிட முடியும். ஆனால் நீண்ட விடைகளை அப்படி கடைசி நேரத்தில் எழுத முயன்றால் பதற்றம்தான் மிஞ்சும். அதனால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்.
பதில்கள் சரிவரத் தெரியாத கேள்விகளில் பொழுதைக் கழிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
7. தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், பதற்றமோ கவலையோ அடைய வேண்டியதில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசியுங்கள். சரியான விடையாக கருதும் பதிலில் ‘டிக்’ செய்துவிட்டு நகருங்கள்.
அல்லது, கடைசியில் பார்த்துக்கொள்ளலாம். அதன்பிறகு அடுத்த கேள்விகளுக்கு பதில் எழுதும்போது முந்தைய பதில் தெரியாத கேள்வியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. இது குழப்பத்திற்கு வழி வகுக்கும்.
8. தேர்வில் உங்கள் கையெழுத்து நன்றாக இருந்தால், அதிக மதிப்பெண்களுக்கு நிச்சயம் உதவும். காரணம், உங்களைப் பற்றிய ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷ்ஷன்’னை அதுதான் உருவாக்கும். அதேபோல முக்கிய பாயிண்ட்களை அடிக்கோடிட்டு காட்டலாம். அதுவும் விடைத்தாள் திருத்துவோருக்கு உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். உங்கள் பதில்களுக்கு முழு மதிப்பெண்களை அவர்கள் போடுவார்கள்.
இந்த டிப்ஸ்களை 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்ல, 10-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களும் கவனத்தில் கொள்ளலாம்.