/indian-express-tamil/media/media_files/2025/05/04/rma1rYM56uz5K3Kro4dX.jpg)
இன்று (மே 4) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக, நேற்றைய தினம் (மே 3) அனைத்து தேர்வு மையங்களிலும் மாதிரி தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு வினாத்தாள் கசிவு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது நடைபெறும் தேர்வு மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில், ஏறத்தாழ 22.7 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை சுமார் 24 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 22.7 lakh candidates to sit for NEET-UG today amid tight vigil
மாவட்டம், மாநிலம் மற்றும் மையம் அடிப்படையில் மூன்று கட்டங்களாக கண்காணிப்பு பணிகள் இருக்கும் என்று கல்வி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்களில் போதுமான அளவு குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் மற்றும் முதலுதவி, ஆம்புலன்ஸ் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகளை "வெளிப்படையான, சீரான மற்றும் நியாயமான முறையில்" நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் தேர்தல்களைப் போலவே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.
பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும், ஏற்பாடுகள் நடைமுறையில் இருப்பதையும் உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உட்பட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிகளைத் தடுத்தல்) சட்டம், 2024 இன் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு விதிகளை அறிவித்த பிறகு நடைபெறும் முதல் இளநிலை நீட் தேர்வு இதுவாகும். மேலும், இந்த தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை என்.டி.ஏ நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அளவில் இந்த தேர்வை எழுத 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21 ஆயிரத்து 960 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றன.
மதியம் 1:30 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாளை அட்டையை மாணவர்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தேர்வு அறைக்குள் கைப்பேசி, கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தமிழகத்தில் இந்த ஆண்டும் தேனி, பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை. அப்பகுதி மாணவர்களுக்கு அருகே இருக்கும் நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.