மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், ஜூன் 18, 2024 நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,888 மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபகரமான வேலைகளைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது. இதுவரை 252 கல்லூரிகள் வேலை வாய்ப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளன. வேலை வாய்ப்புகள் இன்னும் நடந்து வருவதாகவும், சுமார் 58,000 மாணவர்கள் தங்கள் படிப்பின் இறுதி ஆண்டில் படித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் விவசாயம், ஆடை, தானியங்கி, அழகு மற்றும் ஹெல்த், கட்டுமானம், எலக்ட்ரானிக்ஸ், உணவு தயாரிப்பு, ஜூவல்லரி, பசுமை வேலை வாய்ப்பு, கட்டுமானம், இரும்பு மற்றும் ஸ்டீல், ஐடி தொழில்நுட்பம், தோல், சரக்கு, ஊடகம், தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர் என தி இந்து ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
மேலும் இதில் 18250 பேர் ரு.2 லட்சத்துக்குள் ஆண்டு சம்பளத்திலும், 7259 பேர் ரூ.2-3 லட்சம் சம்பளத்திலும், 88 பேர் ரூ.2-4 லட்சம் சம்பளத்திலும், 229 பேர் ரூ.3-4 லட்சம் சம்பளத்திலும், 42 பேர் ரூ.4-5 லட்சம் சம்பளத்திலும், 8 பேர் ரூ.5-6 லட்சம் சம்பளத்திலும், 12 பேர் ரூ.6-8 லட்சம் சம்பளத்திலும் பணியில் சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 25 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“