திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துநர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 281 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன.
ஆட்சேர்ப்பு அறிவிப்பில் நான்கு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், நூலகர் ஆகிய துறைகளை உள்ளடக்கி வெளித்துறை பிரிவின் கீழ் 174 இடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய துறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும், நாதஸ்வரம், தவில் ஆகிய பணிகளை உள்ளடக்கி உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும், ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட துறைகளை 19 காலிப்பணிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் நியமனம்
ஒவ்வொரு பணிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து சமய அறநிலைத் துறை வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்புகிறார்கள் என்றால் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க palanimurugan.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி ஆகும். விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம்- 624 601
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/