தமிழகத்தில் 292 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. 4-வது சுற்று கவுன்சிலிங் அக்டோபர் 28-ஆம் தேதி முடிவடைந்து, அதன் பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும். நவம்பர் 5-ஆம் தேதிக்குள் அனைத்தும் முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு எம்பிபிஎஸ் இடமும், 23 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.
7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் நான்கு பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 67 எம்பிபிஎஸ் இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 61 இடங்களும் காலியாக உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் 136 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
தீபாவளிக்குப் பிறகு மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது தமிழகத்தில் ஆயுர்வேத முதுகலை படிப்புகளை தொடங்க வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“