உக்ரைனின் போர் சூழல், வெளிநாட்டிற்கு மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் மீதான கவனத்தையும், அவர்களது நிலை குறித்த கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகள் பங்கேற்கும் (FMGE) தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களால் இந்தியாவில் மருத்துவ பணியாற்ற முடியும்.
இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் (NBE) கூற்றுப்படி, 2015-ல் 12,116 பேர் மட்டுமே தேர்வை எழுதிய நிலையில், 2020இல் அதன் எண்ணிக்கை 35,774 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் கூடுதலாக 30 ஆயிரம் மருத்துவ சீட்கள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NBE நடத்தும் FMGE தேர்வு இரண்டு ஆண்டுகள் ஒரு முறை நடத்தப்படும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், அதில் தேர்ச்சி பெற மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.
தேர்வில் பங்கேற்கும் பெரும்பாலான வெளிநாட்டு பட்டதாரிகள் சீனா, ரஷ்யா, உக்ரைன், கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகும்.
2020இல், சீனா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 12,680 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து, ரஷ்யாவில் பயின்ற 4,313 பேரும், உக்ரைனில் பயின்ற 4,258 பேரும், கிர்கிஸ்தானில் பயின்ற 4,156 பேரும், பிலிப்பைன்ஸில் பயின்ற 3,142 பேரும், கஜகஸ்தானில் இருந்து 2,311 பேரும் தேர்வு எழுதினர்.
கடந்த 5 ஆண்டுகளில், FMGE தேர்வு எழுதுவோரின் தேர்ச்சி எண்ணிக்கை 15.82 சதவீதமாக உள்ளது. அதில், உக்ரைனில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 17.22 சதவீதமாக உள்ளது.
உலக நாடுகளுடன் கணக்கிடுகையில், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு மருத்துவ பயில செல்வோரின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. உதாரணமாக, பிலிப்பைன்ஸில் பட்டம் பெற்ற இந்திய மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை 2015ல் இருந்து கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
NBE-இல் முன்பு பணியாற்றிய மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், FMGE தேர்வில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வருவோர் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். 2020இல், பிலிப்பைன்ஸ் பட்டதாரிகள் 33.7 சதவீதம் பேர் FMGE தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம், 2019இல் 50.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ள 83,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 2021 ஆம் ஆண்டில் 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் இளங்கலை தேர்வெழுதியுள்ளனர். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 1:1000 என்ற பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் நோயாளி விகிதத்தின்படி, இந்தியாவிற்கு 1.38 மில்லியன் மருத்துவர்கள் தேவை. தேசிய சுகாதார ப்ரோபைல் 2021 படி, நாட்டில் 1.2 மில்லியன் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் இருப்பதாகக் கூறுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காத பல மாணவர்கள் ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படிக்க விரும்புகிறன். ஏனென்றால், அங்கு தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை விட மிக குறைவாகும் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
உதாரணமாக, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான செலவு ஆறு வருடங்களுக்கு மொத்தமாகவே ரூ.15 முதல் 20 லட்சம் வரை மட்டுமே ஆகும். ஆனால், இந்தியாவில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் 4.5 வருட படிப்புக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும். அதே சமயம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தப் படிப்புக்கும் சில ஆயிரம் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் தலைவரான அருணா வணிகர் கூறுகையில், ரஷ்யா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்கள் பலர் சிக்கலை சந்திக்கின்றனர். ஏனென்றால், FMGE தேர்வில் 20 சதவீதத்திற்கும் குறைவானர்கள்தான் தேர்ச்சி அடைகின்றனர்.
உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து மருத்துவ பட்டதாரிகளில் 13% பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றனர் உக்ரேனிய மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 16% பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதற்கான தீர்வு, மருத்துவக் கல்விக்கான செலவைக் கட்டுப்படுத்துவது மட்டுமே ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகள், நிறுவனங்கள், பரோபகாரர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுடன் அனைத்து கல்லூரிகள்/நிறுவனங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவப் பட்டப்படிப்பை மனிதாபிமானமாகவும், தொடர தகுதியுடையதாகவும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil