மாநில ஒதுக்கீட்டில் 6 சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு 8,379 எம்.பி.பி.எஸ் இடங்களில் 6 இடங்களும், 2,113 பி.டி.எஸ் இடங்களில் 28 இடங்களும் காலியாக உள்ளன. தேசிய அளவு ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ்., இடத்தை தேர்வு செய்து 3வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தால் அவர் தேசிய அளவு ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகி விடும். பின்னர் நடைபெறும் மாநில ஒதுக்கீட்டில் அந்த இடம் நிரப்பவில்லை என்றால் காலியாகவே இருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் 6 எம்.பி.பி.எஸ் இடங்களும், 28 பி.டி.எஸ் இடங்களும் காலியாக உள்ளன. இந்நிலையில் இவ்வாறு இடங்களை தேர்வு செய்தும் கல்லூரியில் சேராத 20 மாணவர்களுக்கு அபராதம், மருத்துவக் கல்வியில் ஓராண்டு சேர அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் ரூ. 25 லட்சம் கல்வி கட்டணம் மற்றும் வெளியேறுவதற்கான கட்டணம் செலுத்தியதால் அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் அபராத கட்டணம் செலுத்தியதால் அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஆறு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகு, ஐந்து எம்பிபிஎஸ் இடங்களும், 120 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்த என்று அவர் கூறினார்.
இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அளித்த காலக்கெடு முடிவடைந்ததால், காலியாக உள்ள இந்த இடங்களுக்கு மாணவர்களை இனி சேர்க்க முடியாது என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“