/indian-express-tamil/media/media_files/2025/07/23/neet-mbbs-seat-matrix-2025-07-23-17-02-51.jpg)
எம்.பி.பி.எஸ் சீட்: தனியார் கல்லூரிகளில் அதிகரிப்பு; அரசு கல்லூரிகளில் ஏன் இல்லை?
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கலந்தாய்வு செயல்முறைக்காக (Counselling Process) புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 400 இடங்கள் இம்முறை அதிகரிக்கப்பட்டு, மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வில் (Round 3) சேர்க்கப்பட உள்ளது. இந்தச் செய்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இந்த இடங்கள் அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. யூடியூப்பில் எவர்கிரீன் கைடன்ஸ் டாக்டர் அனந்தமூர்த்தி வழங்கிய கருத்து மற்றும் பகுப்பாய்வு குறித்து இங்கே காணலாம்.
எந்தெந்தக் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் அதிகரிப்பு?
தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக்குழுமம் (Tamil Nadu Medical Selection Committee) இந்த இடங்களைச் சாய்ஸ் ஃபில்லிங்கில் (Choice Filling) சேர்க்குமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட சில முக்கிய இடங்களின் விவரம் (400 இடங்கள்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| கல்லூரி பெயர் | ஏற்கனவே இருந்த இடங்கள் | தற்போது அதிகரிப்பு | அதிகரித்த இடங்கள் |
| அன்னை மெடிக்கல் கல்லூரி | 100 | 200 | 100 |
| அருணை மெடிக்கல் கல்லூரி | 150 | 200 | 50 |
| பணிமலர் மெடிக்கல் கல்லூரி | 150 | 200 | 50 |
| சென்ட் பீடர்ஸ் மெடிக்கல் கல்லூரி | 150 | 250 | 100 |
| தாகூர் மெடிக்கல் கல்லூரி | 150 | 250 | 100 |
அரசு கல்லூரிகளில் ஏன் இந்த இடங்களை அதிகரிக்கவில்லை?
தனியார் கல்லூரிகள் பலவற்றில் 150, 200, 250 என இடங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் (Infrastructure Facilities) இருக்கும் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்னும் 100 அல்லது 150 இடங்கள் மட்டுமே உள்ளன. ஏழை மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் அதிகரித்தால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
தனியார் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பது, சாதாரண மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான வாய்ப்பை எளிதாக்காது. பல அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்களை 200 அல்லது 250 ஆக உயர்த்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், அவற்றை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே இடங்களை அள்ளி வழங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடமாவது (2026) 100 மற்றும் 150 இடங்கள் உள்ள அரசு கல்லூரிகளை 200 மற்றும் 250 இடங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்ஆஃப் குறையுமா? எப்படி?
தற்போது சேர்க்கப்பட்டுள்ள 400 சீட் (இது தவிர விவேகானந்தா, வெங்கடேஸ்வரா போன்ற கல்லூரிகளிலும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன) காரணமாக, இந்த ரவுண்ட் 3-ல் கட்ஆஃப் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிகரித்த இடங்களின் பங்கீடு (தோராயமாக): அரசு கோட்டா (Government Quota): 245 இடங்கள், மேனேஜ்மென்ட் கோட்டா (Management Quota): 155 இடங்கள். எனவே, மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும் போது, புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரிகளையும் (அரசு கோட்டாவிற்கு வரும் 245 இடங்கள்) பட்டியலில் சேர்த்து, கட்டாயம் சாய்ஸ் ஃபில் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us