உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இன்று (மே 17) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. என்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளன. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவடைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த துறை இன்று அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும். பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“