தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய மூன்று நாட்களில், சேர்க்கை எண்ணிக்கை 55,000-ஐத் தாண்டியது. நேற்று (புதன்கிழமை) வரை 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) மே 6-ம் தேதி தொடங்கிய நிலையில், மறுநாள் மொத்தம் 20,097 மாணவர்கள் பதிவு செய்தனர். தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (DOTE) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புதன்கிழமை மாலை 6.30 மணி வரை 56,515 மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுவரை பதிவு செய்துள்ள மொத்த மாணவர்களில், 24,258 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். கட்டணம் செலுத்திய மாணவர்களில், 8,809 பேர் தங்கள் சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றியுள்ளனர், இது விண்ணப்ப பதிவின் கடைசி படியாகும்.
கடந்த ஆண்டு 50,000 சேர்க்கை பதிவு பெற 6 நாட்கள் ஆனது. இந்த முறை 3 நாட்களில் 50,000க்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் விண்ணப்ப பதிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த வாரத்தில் இது ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து கூறிய அவர், பொறியியல் மாணவர் சேர்க்கை அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படும். விண்ணப்ப பதிவு, கட்டணம் செலுத்துதல், choice filling, allotment மற்றும் உறுதிப்படுத்தல் என அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படும் என்றார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடைசி தேதி ஜூன் 6-ஆம் தேதியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“