தமிழ்நாட்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை வைத்து வரும் நிலையில், 24 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது இரண்டாவது முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முதுகப்பட்டி கிராமத்தில் தினக்கூலி தொழிலாளிகளான மாணிக்கம், இன்பவள்ளி ஆகியோருக்கு மகனாக பிறந்த காவலர் எம்.சிவராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.
இதையும் படியுங்கள்: நீட் கவுன்சிலிங்; சிறப்பு பிரிவில் 719 பேருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் ஒதுக்கீடு
மூன்று உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த சிவராஜ், சிறுவயதிலிருந்தே மருத்துவப் படிப்பைத் தொடர வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். 2016 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில், அவர் 1200 க்கு 915 மதிப்பெண்கள் எடுத்தார், இருப்பினும் இந்த மதிப்பெண்கள் அவரது மருத்துவ கனவிற்கு உதவவில்லை.
மனமுடைந்த சிவராஜ் கரூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்து வந்தார். இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க முடிவு செய்து, அதில் தேர்ச்சி பெற்றார். காவலர் பயிற்சிக்குப் பிறகு, அவர் 2020 இல் ஆவடி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் மற்றும் கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார்.
2020 ஆம் ஆண்டில், இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உறுதி செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த உடனேயே பணியில் சேர்ந்த சிவராஜ், மீண்டும் தனது கனவைத் தொடர விரும்பி நீட் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
"எனக்கு போலீஸ் வேலை கிடைத்தது, ஆனால் நான் எப்போதும் மருத்துவராக விரும்பினேன். 7.5 சதவீத இடஒதுக்கீடு எனது கனவை அடைய உதவும் என்று நான் நம்பினேன்,” என்று சிவராஜ் indianexpress.com இடம் கூறினார்.
சிவராஜின் குடும்பம் செல்வச் செழிப்பானது அல்ல, அவருடைய சம்பளத்தை நம்பியே இருந்தது; இருப்பினும், மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு எந்தத் தனிப் பயிற்சியும் பெற முடியாத அல்லது தனது கனவைக் கைவிடத் தயாராக இல்லாத காவல்துறை கான்ஸ்டபிளான சிவராஜ், தானே தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
“எனது நண்பர்களின் ஆதரவுடன், நான் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவும் புத்தகங்கள், ஆன்லைன் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தேன். தமிழ்வழிப் பள்ளியில் படித்ததால், என் மொழியில் உள்ள பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் புத்தகங்களைத் தேடிச் சென்றேன்,'' என்று சிவராஜ் கூறினார்.
‘ராஜேஷ் நீட் உயிரியல்’ புத்தகம் மற்றும் டாக்டர் ராஜேஷ் வரதராஜின் ஆன்லைன் கற்பித்தல் தேர்வுக்குத் தயாராக உதவியது என்று சிவராஜ் பாராட்டு தெரிவித்தார்.
2022ல் முதல் முயற்சியிலேயே சிவராஜ் 268 மதிப்பெண்கள் பெற்றார். இருப்பினும், அவர் மீண்டும் தயாராகி, 2023 இல் தனது இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார், இப்போது 720 க்கு 400 மதிப்பெண்களைப் பெற்று, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முடிந்தது.
வேலை நேரங்களுக்கு இடையில் எவ்வாறு நேரத்தைச் சமாளிப்பது என்று கேட்டபோது, அவர் தனது கனவை அடைவதில் கவனம் செலுத்தியதாகவும், அதனால் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தைச் செலவிடவில்லை என்றும் சிவராஜ் கூறினார்.
"வேலை நேரம் முடிந்ததும், தேர்வுகளுக்குத் தயாராவதற்கு எனது நேரத்தை ஒதுக்குகிறேன். நான் தயாரித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கைபேசியில் படங்களை எடுத்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். மேலும் பல ஆன்லைன் வீடியோக்கள் தேர்வுக்கு தயாராக எனக்கு உதவியது. எனது இலக்கில் நான் கவனம் செலுத்தியதால், என் கவனத்தை திசைதிருப்ப எதையும் நான் அனுமதிக்கவில்லை,” என்று சிவராஜ் கூறினார்.
7.5 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தின் மூலம் மருத்துவ சீட் பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தனது தம்பியும், தனது கனவின் பின்னால் ஓடத் தூண்டியதில் அவருக்கு முக்கிய பலம் என்று சிவராஜ் கூறினார்.
தனது உயர் அதிகாரிகளைப் பற்றி கருத்துத் தெரிவித்த சிவராஜ், அவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்ததாகவும், தேர்வு எழுத விடுப்பு எடுக்க அனுமதித்ததாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக, மற்ற மாணவர்களுக்கும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவ வல்லுநர்களாக மாற விரும்பும் மாணவர்களுக்கும் என்ன மாதிரியான செய்தியை அனுப்ப விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, மாணவர்கள் தேர்வுக்கு பயப்பட வேண்டாம், அவர்கள் கவனம் செலுத்தினால், கடினமாக உழைத்தால், அவர்கள் தங்கள் கனவை நிச்சயமாக அடைய முடியும் என்று சிவராஜ் கூறினார்.
“நீட் உள்ளிட்ட எந்தத் தேர்வுக்கும் பயப்பட வேண்டாம், உங்கள் கடின உழைப்பைத் தொடருங்கள். நமது அரசாங்கத்தின் உள் இட ஒதுக்கீடு நமக்கு உதவ உள்ளது. இது எனக்கும் பலருக்கும் உதவியது. மாணவர்கள் பயிற்சியைத் தொடர வேண்டும், வசதி உள்ளவர்கள் பயிற்சி மையத்திற்குச் செல்லலாம் அல்லது ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தால், அவர்களும் தாங்களாகவே தயார் செய்து தேர்வில் தேர்ச்சி பெறலாம்,” என்றும் சிவராஜ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.