7.5% இடஒதுக்கீட்டால் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

7.5% reservation for govt school students, engineering applications rise: தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசு; பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்வு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதையடுத்து, தொழிற்கல்வி படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தமிழ் நாட்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில், BE, B Tech மற்றும் B.Arch படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 26 அன்று தொடங்கியது.

இதனிடையே, தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. குழு அளித்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. அதனை இந்தாண்டு மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அரசு பள்ளி என்பதை குறிப்பிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் பட்டியல் தனியே எடுக்கப்பட்டு, அதற்கேற்றாற் போல்  சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்த பின்னர், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தினசரி 10,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகி வந்த நிலையில், இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில், சுமார் 20,000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அறிவிப்புக்கு ஒரு நாள் முன்னதாக (ஆகஸ்ட் 3), பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1.04 லட்சம். அதேநேரம் அறிவிப்புக்கு பின்னர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 1.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 24. பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு பதிவு செய்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1.38 லட்சம். ஆனால் இந்த ஆண்டு சேர்க்கை 1.5 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் விண்ணப்பபிப்பதற்கான காலக்கெடு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதாகவும் பொறியியல் சேர்க்கை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு குறித்து அரசு உத்தரவு பிறப்பித்தால் அல்லது அரசிதழில் வெளியிட்டால், அதற்கேற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். 7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் சேர்க்கை பெற உதவும். இருப்பினும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும், என பொறியியல் சேர்க்கை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி மற்றும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், பொறியியல் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இடஒதுக்கீடு சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் தங்கள் வகுப்புகளில் முழு மாணவர் சேர்க்கையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 7 5 reservation for govt school students engineering applications rise

Next Story
சிறுபான்மையினர் பள்ளிகளை RTE க்குள் கொண்டு வர வேண்டும்; NCPCR பரிந்துரை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com