தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்புகளுக்கு வரும் மே 8-ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் வரும் மே 8-ம் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர சேர 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வரும் மே 8-ம் தேதி முதல் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம் மையங்களின் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் ரூ.48, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 08.05.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக மே 8 முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே 19-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.