ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான தேர்வுச் செயல்முறை நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட கணினி வழித் தேர்வுகள் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, முதல் கட்ட தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கப்படும்.
இந்தநிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.