ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், பல்வேறு புதிய சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தனர். அதில், முக்கியமானது இருபாலர் கல்விக்கு தடைவிதித்தது தான். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தான் பயில வேண்டும் என கூறியதால், இருவரும் வெவ்வேறு ஷிப்ட்டில் கல்வி பயிலுகின்றனர். சில பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணாக, மருத்துவமனைகளில் இருப்பது போல் ஆண்கள், பெண்கள் இடையே screen அமைத்து பாடம் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காபூல் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 12,000 பெண்களும், கந்தஹார் பல்கலைக்கழகத்தில் 1,000 பெண்களும் கல்வி பயிலுகின்றனர். இதில் 300 பேர் மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள், விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தற்போது, பல தனியார் பல்கலைகழகங்கள் குறைந்த அளவிலான மாணவர்கள் எண்ணிக்கையுடன் வகுப்பைத் தொடங்கியுள்ளனர்.
தாலிபான்களின் புதிய சட்டம் குறித்து பேசிய கந்தஹார் பல்கலைக்கழக முதல்வர் அப்துல் வாஹெட் வாசிக் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "பொதுப் பல்கலைக்கழகங்கள் பணம் கிடைத்தவுடன் மட்டுமே மீண்டும் திறக்க முடியும். ஏனென்றால், தனியார் பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் அரசு பல்கலைக்கழகங்களில் அதிகளவிலான மாணவர்கள் பயிலுகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 10 முதல் 20 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களைப் பிரித்து பாடம் எடுப்பது எளிது. ஆனால், இங்கு 100 முதல் 150 மாணவர்கள் பயிலுகின்றனர். எனவே இது எங்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக சில வகுப்பில் மிகக் குறைவான அளவிலே பெண்கள் இருப்பார்கள்" என்றார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 40 பொது பல்கலைக்கழகங்கள் உள்ளன. இணை கல்விக்கு தடை விதித்த தாலிபான்களின் உத்தரவுக்குப் பிறகு, பொது பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி அமைச்சகத்தால் உள்ளூர் யதார்த்தங்களின் அடிப்படையில் மீண்டும் திறப்பதற்கான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி கொண்டன. அதனடிப்படையில், பெண்கள் திரை அமைத்து கல்வி பயில அனுமதித்துள்ளனர் அல்லது சொந்த மாகாணங்களில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளனர்.
தகர் பல்கலைக்கழகத்தின் முதல்வர் கைருதீன் கைர்கா பேசுகையில், " ஒரு வகுப்பில் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் பட்சத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதை அமல்படுத்த, காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதே சமயம், 15க்கும் குறைவான பெண்கள் இருந்தால், வகுப்பறையில் ஆண்களிடமிருந்து பெண்களைப் பிரிப்பதற்காக மருத்துவமனைகளில் பயன்படுத்தும் திரைகளை உபயோகிக்கவுள்ளோம்" என்றார்.
மேலும் பேசிய வாசிக், "எங்கள் கல்லூரியில் பயிலும் பெண்கள் சிலர் இடமாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்ததால் நாங்கள் இதை முன்மொழிந்தோம். ஆனால் கந்தஹார் பல்கலைக்கழகத்தில் வகுப்புகளைத் தொடர விரும்புவோருக்கு, திரை அமைத்து வகுப்புகள் நடத்தப்படும்.
வகுப்பறையின் கார்னரில் திரை அமைத்து அதற்கு பின்னால் நான்கு பெண்கள் வரை அமர மைக்க திட்டமிட்டுள்ளோம். திரைக்கு முன்பு 30 முதல் 50 செமீ அளவான வலை அமைப்பை உருவாக்கி அவர்கள் ஆசிரியர், வகுப்பு, போர்ட் பார்க்கும் வகையில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இல்லையெனில், தகர் பல்கலைக்கழகம் போல 15க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்ட வகுப்புகளுக்கு, மாணவர்களை ஷிப்டுகளில் வரவழைக்க முன்மொழிந்துள்ளது. காலையில் பெண்களுக்கும், பிற்பகல் ஆண்களுக்கும் நடத்த முடிவு செய்தோம்.ஆனால் இந்த முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில், பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை கல்வி இலவசம். மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை, மேலும் விடுதிகள் மற்றும் விடுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது.
கந்தஹார் மற்றும் ஹெல்மண்ட் பல்கலைக்கழக முதல்வர்கள் கூற்றுப்படி, ஆண்கள் பெண்களுக்கு கற்பிக்க எந்த தடையும் இல்லை என்று கூறினர்.
அதே சமயம் புதிய பல்கலைக்கழகங்களான ஹெல்மண்ட் மற்றும் நிம்ரோஸ் ஆகியவற்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, இந்த நடைமுறையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.