தமிழகத்தில் பொறியியல் சேர்க்கையின் 2 ஆம் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளும் அடங்கும்.
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். தற்போது 2 ஆம் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து உள்ள நிலையில், 440 பொறியியல் கல்லூரிகளில், 306 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை நிரம்பியுள்ளது. இந்த 306 கல்லூரிகளில் குறைந்தது ஆறு கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக இருப்பது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 386 இடங்களில் 36 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. பட்டுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 387 இடங்களில் 33 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதேபோல், பண்ருட்டியில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 387 இடங்களில் 21 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 387 இடங்களில் 17 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. ராமநாதபுரத்தில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 387 இடங்களில் 13 இடங்கள் நிரம்பியுள்ளது. மிகக்குறைவாக அரியலூர் பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 388 இடங்களில் 11 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது.
ஆனால், இரண்டாம் சுற்று கலந்தாய்வின் முடிவில், சென்னையில் உள்ள நான்கு அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 95 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இப்படி பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர்க்கை குறைந்ததற்கு, போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். குறைந்த கட்டண அமைப்பு மற்றும் தரமான கல்விக்கான தேவைக்காக பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கல்லூரிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த ஆறு கல்லூரிகளிலும் இரண்டு சுற்றுகளுக்குப் பிறகும் 10 சதவிகித இடங்கள் கூட நிரம்பவில்லை என்பது கவலை அளிப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதற்கு முதன்மையான காரணமாக ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த கல்லூரிகள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. வசதியான ஆய்வகங்கள் இல்லை. கல்லூரிகளின் இருப்பிடம் அனைவருக்கும் பொருத்தமானதாக இல்லை. சில உறுப்பு கல்லூரிகள் உட்புற பகுதிகளில் அமைந்துள்ளன, அங்கு மாணவர்கள் படிக்க விரும்புவதில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், கணினி பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் மற்ற முக்கிய பொறியியல் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற படிப்புகளில் சேர்க்கையை பாதித்துள்ளது என ஒரு சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
அரசு பொறியியல் கல்லூரிகளுக்கே இந்த நிலைமை இருக்கையில், ஒரு சில தனியார் கல்லூரிகளில் இன்னும் ஒரு இடம் கூட நிரம்பாமல் உள்ளது. இந்தாண்டு கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பொறியியல் இடங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. தற்போது கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவதிலும் குறைவான வேகமே காணப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil