தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ்களைக் கொண்ட மாணவர்களுக்குச் சேர்க்கை மறுப்பதைத் தவிர்க்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரித்துள்ளதுடன், அத்தகையத் தகுதிகள் உயர் மற்றும் தொழில்முறை கல்விக்கான சேர்க்கைக்கு முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நடைமுறைகள் தேசியக் கல்விக் கொள்கை வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், உயர் கல்விக்கான மாணவர்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒழுங்குமுறை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
“சில ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள், தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்தபோதிலும், சேர்க்கை மறுத்துள்ளதாக கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.
"என்.ஐ.ஓ.எஸ் என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இது சி.பி.எஸ்.இ, சி.ஐ.எஸ்.சி.இ மற்றும் மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் போன்ற பிற தேசிய மற்றும் மாநில வாரியங்களுக்குச் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்றும் அது மேலும் கூறியது.
வெற்றிகரமாக என்.ஐ.ஓ.எஸ் மூலம் தேர்ச்சி பெற்று, தகுதிக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள், பிற அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சமமாக கருதப்படுவதை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.