அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் விருப்ப பாடமாக மாற்றப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்காமலே பயோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் வேளாண் பொறியியல் பிரிவுகளை இளங்கலை பொறியியல் படிப்புகளாக படிக்கலாம்.
இருப்பினும் கணினி அறிவியல் உள்ளிட்ட 14 பொறியியல் படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
இது குறித்து, ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ராபுதே கூறுகையில் இது மாணவர்களுக்கான நெகிழ்வான அணுகுமுறையாகும். 12ஆம் வகுப்பில் இந்த பாடங்களை படிக்கவில்லை என்றாலும் ஆன்லைனில் (MOOC) ஒன்றிரண்டு பாடங்களை படித்தால் போதுமானது. நுழைவுத் தேர்வுமூலம் பொறியியல் படிப்புகளில் சேரலாம். இதன்மூலம் இந்த ஆண்டு 45% மாணவர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்கலாம். இந்த புதிய விதிமுறையானது, நெகிழ்வானது, தாராளமயமானது மற்றும் அதிகாரம் அளிக்க கூடியது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் தான் பொறியியலின் அடித்தளம் அதன் முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை என்றும் கூறியுள்ளார்.
குருகிராமின் அமிட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. சர்மா கூறுகையில், கணிதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட அறிவியல் மற்றும் பகுப்பாய்வு திறன்களின் அடித்தளத்தில் தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் செழித்து வளர்கின்றன. என்பது மறந்துவிட்டது. பொறியியலில் அறிவியல் மற்றும் கணிதத்தை நீர்த்து போகச் செய்வது நம் நாட்டில் பொறியியல் கல்வியின் தரத்தை அழித்துவிடும் என்கிறார்.
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 12ஆம் வகுப்பில் படிப்பதோடு நுழைவுத்தேர்வு தகுதி இருந்தது. பொறியியல் படிக்க விரும்புபவர்களுக்கு அறிவியல் பாடங்கள் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்று, நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் தேர்வர் கூறுகிறார்.
WBJEE 2020ல் முதலிடம் பெற்ற சௌரதீப் தாஸ், ”கணிதம் மற்றும் அறிவியல் படிக்காதவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தால் கல்லூரியில் அவர்களுக்கு அடிப்படைகளை கற்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் அவர்கள் சிரமப்படுவார்கள்” என்று கூறுகிறார்.
புதிய விதிமுறைகள் மாணவர்களிடையே இடைவெளியை உருவாக்கும் என்று இந்தியன் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர் ஆர்யன் புரோதி நம்புகிறார். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத மாணவர்கள், இயந்திரவியல், மின்னியல் மற்றும் வேளாண்மை அல்லது டெக்ஸ்டைல் போன்ற பாடங்களை பின்பற்றுவது கடினம். கல்லூரியில் மாணவர்களுக்கு அடிப்படை பாடத்திட்டத்தை வழங்கினாலும், பொறியியல் படிப்புகளுக்கு போதுமானதாக இருக்காது என்றும் கூறுகிறார்.
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படிக்காதவர்களுக்கு பொறியியல் படிப்பை முடிப்பது கடினமாக இருக்கும். மேலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் சிக்கலை ஏற்படுத்தும்.
இருப்பினும் ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஏ.எம்.ராவணி, புதிய திட்டம் பொறியியல் படிக்க விரும்பும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படிக்காத மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் குறித்த அறிவு அவசியம் தான், இருப்பினும் பயோடெக்னாலஜி மற்றும் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கு கணிதத்தை விட உரியியல் பற்றிய அறிவு மிக முக்கியமானது என்று கூறுகிறார்.
எவ்வாறாயினும் இந்த புதிய விதிமுறைகள் நாட்டில் பொறியியல் படிப்புகளின் தரத்தை குறைக்ககூடியவை என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.