ஒரே மாதிரியான கல்லூரிகளின் பெயரால், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் புதிய திருத்தகங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மட்டும் 440 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில கல்லூரிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக உள்ளன.
அதாவது பிரபலமான, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தேர்ச்சி விகிதத்துடன் கூடிய கல்லூரியின் பெயரிலே, குறைவான உள்கட்டமைப்பு மற்றும் தரம் குறைந்த கல்லூரியின் பெயரும் இருந்து வருகிறது. இதனால், பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். அதாவது ஒரே பெயரில் இருப்பதால், அனைத்தும் ஒரே கல்லூரியின் கிளைகளோ, அல்லது ஒரே கல்வி குழுமத்தின் கல்லூரிகளோ என நினைத்து மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.
தலைசிறந்த கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், அதே பெயரில் உள்ள தரம் குறைவான கல்லூரியில் சேர நேரிடுகிறது. பொறியியல் கவுன்சலிங்கின்போது கல்லூரிகளுக்கு குறியீடு எண் வழங்கப்பட்டாலும், கல்லூரிகளை பிரித்து அறிவது கடினமாக உள்ளது. இந்தநிலையில், இந்தக் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் புதிய திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, கல்லூரி எங்கு அமைந்துள்ளது என்ற அமைவிடத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“