/indian-express-tamil/media/media_files/2025/09/17/indians-architecture-2025-09-17-15-51-23.jpg)
20 லட்சம் மாணவர்களுக்கு வாய்ப்பு: பொறியியல் வேலைவாய்ப்பை மேம்படுத்த ஏ.ஐ.சி.டி.இ. திட்டம்
இந்தியாவில் உள்ள பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் முக்கிய கவலையாக உள்ள நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) 'பொறியாளர்கள் தினத்தை' (செப்டம்பர் 15) முன்னிட்டு, மாணவர்களை தொழில் துறைக்கு ஏற்றவாறு தயார்படுத்தும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, இந்த 'புராஜெக்ட் பிராக்டிஸ்' (Project PRACTICE), ஏ.ஐ.சி.டி.இ. ஆராய்ச்சி பயிற்சி இணையதளம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவுகள் மற்றும் 'கிளைமேட் செல்' (Climate Cells) அமைப்பதை கட்டாயமாக்கும் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
புராஜெக்ட் பிராக்டிஸ்: 20 லட்சம் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பு
இந்த சீர்திருத்தங்களின் மையமாக 'புராஜெக்ட் பிராக்டிஸ்' உள்ளது. இது, கல்வித் தரத்தில் பின்தங்கியிருக்கும் 2ம் மற்றும் 3ம் நிலை பொறியியல் கல்லூரிகளில் கவனம் செலுத்துகிறது. அடுத்த 3 ஆண்டுகளில், இந்தத் திட்டம் 20 லட்சம் மாணவர்களுக்கும், 10,000 ஆசிரியர்களுக்கும் திட்ட அடிப்படையிலான கற்றல், நேரடி தொழில் துறை திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்கள் பயிற்சி மூலம் உதவ இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேக்கர் பவன் ஃபவுண்டேஷன், LEAP மற்றும் CRISP ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன், இந்த திட்டத்திற்கு ரூ.23.31 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை AICTE மற்றும் அதன் கூட்டாளர்கள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இலவச ஏ.ஐ கருவிகள் மற்றும் புதிய இணையதளம்
இந்த அறிமுக விழாவில், ஏ.ஐ.சி.டி.இ மாணவர்கள் அனைவருக்கும் ChatGPT, Perplexity Go போன்ற ஏ.ஐ. கருவிகளை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் மாணவர்கள் வழக்கமான பணிகளை தானியங்கு முறையில் செய்ய முடியும் என்றும், இதனால் அவர்கள் விமர்சன சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீதாராம், இந்த புதிய நடவடிக்கைகள் வேலைவாய்ப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், புதுமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தொழில்-கல்வி ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று வலியுறுத்தினார்.
'புராஜெக்ட் பிராக்டிஸ்' திட்டத்திற்கு துணையாக, புதிய ARI இணையதளம் மாணவர்களை ஆராய்ச்சி பயிற்சி வாய்ப்புகளுடன் இணைக்கும். மேலும், கல்லூரிகளில் R&D மற்றும் கிளைமேட் செல்களை அமைப்பது, புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டாளர் அமைப்புகளின் தலைவர்கள், இந்த முன்முயற்சி, குறிப்பாக சராசரி மற்றும் பின்தங்கிய நிறுவனங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும், அவற்றின் தரத்தை முன்னணி கல்லூரிகளுக்கு அருகில் கொண்டு வரும் என்றும் தெரிவித்தனர்.
5,868 AICTE அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் மற்றும் டிப்ளமோ நிறுவனங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதால், இந்த சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பு இடைவெளியைக் கணிசமாகக் குறைத்து, தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன்மிக்க பட்டதாரிகளின் புதிய தலைமுறையை உருவாக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us