AICTE Today Tamil News, AICTE Order To Engineering Colleges: பொது முடக்கம் நாட்களில் வழங்கிய சேவைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம் என்றும், இதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் AICTE எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (AICTE) வெள்ளிக் கிழமை (செப்.4) ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் பாதியில் இருந்து பொது முடக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நேரடியாக செல்லவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. எனினும் அநேக கல்வி நிறுவனங்களில் விடுதிக் கட்டணம், மெஸ் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என எதையும் விடாமல் வசூலிப்பதாக AICTE-க்கு புகார்கள் குவிந்தன.
AICTE Order To Engineering Colleges: பொறியியல் கல்லூரிகள் கட்டணம்
இதையடுத்து வருகிற செமஸ்டருக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மெஸ், போக்குவரத்து ஆகியன தொடர்பான பராமரிப்புக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை மீறுகிற கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது AICTE. இதேபோல விண்ணப்பித்துவிட்டு, வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் குறிப்பிட்ட தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி வழங்க AICTE உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கிடையே தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் அரியர்ஸுக்கு கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் ‘பாஸ்’ என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"