நாட்டின் தொழில்நுட்பக் கல்வி ஒழுங்குமுறை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), போலி 10 நாள் (MBA) எம்.பி.ஏ படிப்புகளுக்கு எதிராக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஒருவர் 10 நாள் எம்.பி.ஏ படிப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து மாணவர்களை எச்சரிக்கும் அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ (AICTE) வெளியிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: AICTE warns students against fake 10-day MBA crash course
அந்த அறிவிப்பில், “சில ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் மற்றும் இணைய பிரபலங்கள் 10 நாள் எம்.பி.ஏ கிராஷ் படிப்பை வழங்குவது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற தவறான போக்கு நாட்டின் இளம் மனங்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்பதை அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல், எம்.பி.ஏ அல்லது மேலாண்மை படிப்புகள் (முதுகலை பட்டப்படிப்புக்கு வழிவகுக்கும்) உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை வழங்க எந்த நிறுவனமும் அல்லது பல்கலைக்கழகமும் அனுமதிக்கப்படாது என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MBA என்பது அதிகாரப்பூர்வமாக இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு திட்டமாகும், இது வணிகம் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் மேம்பட்ட திறன்கள் மற்றும் அறிவை தனிநபர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ உள்ளிட்ட நிர்வாகத் படிப்பை வெறும் 10 நாட்களில் முடிக்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அத்தகைய தனிநபர்கள்/ நிறுவனங்கள் வழங்கும் எம்.பி.ஏ க்ராஷ் படிப்பு தவறானது மற்றும் பொருத்தமற்றது என்பதை அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களும்/ மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி சலுகைகளுக்கு இரையாகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“