கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தை முன்னிட்டு, பல மாதங்களாக வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதால், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை 'திருத்தியமைக்க' மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) யோசித்து வருகிறது.
முன்னதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வழிகாட்டுதலின் படி, 2020-21 கல்வியாண்டிற்கான 1-8 வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வி கால அட்டவணையை (Alternative Academic Calendar) தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
அறிமுகப்படுத்தியது. பெற்றோர்கள், இந்த வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வி நாட்காட்டியை www.ciet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களைப் பெரிதும் பயன்படுத்தும் சிபிஎஸ்இ, இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு, 9-12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை திருத்தியமைக்க முயன்று வருகிறது. இதன் மூலம், மாணவர்களின் பாட சுமைகள் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றுக் கல்வி அட்டவணையின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான, அனைத்துப் பாடப்பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் (திவ்யாங் குழந்தைகள்) உட்பட அனைத்து குழந்தைகளுக்குமான தேவைகள், இந்த அட்டவணையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஒலியுடன் கூடிய புத்தகங்கள் (Audio Books), வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன
பாடப்புத்தகம் அல்லது பாடத்திட்டத்தில் உள்ள அத்தியாயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை தொடர்பான சுவாரஸ்யமான, சவாலான செயல்முறைகள் கொண்ட வாராந்திரத் திட்டம், இந்த அட்டவணையில் உள்ளது.மாணவர்களின் கற்றல் முடிவுகள், கருத்துக்களுடன் கோர்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமான அம்சமாகும்.
குழந்தைகள் கல்வி கற்பதன் முன்னேற்றத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மதிப்பீடு செய்துகொள்ள வசதி செய்து கொடுப்பதே, இவ்வாறு கற்றல் முடிவுகளையும், கற்றலுக்கான கருப்பொருள்களையும் கோர்த்திருப்பதற்கான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுக்கு அப்பாலுள்ளவற்றையும், குழந்தைகள் கற்றுக் கொள்ள இது வகை செய்யும் என்று மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil